வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சீர்காழி...

சீர்காழி (Sirkazhi),

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் நதியும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது.


மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.

இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளது. அவற்றில் சில, சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் ,வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு,திருவாரூர், திருமீயச்சூர்,திருமணஞ்சேரி,வேள்விக்குடி மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள் என பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.

ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே மருவி, "சீகாழி' என்றானது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்கின்றனர். ஆயின் விவரமறிந்த சைவப் பெரியோர்கள். "காழி நகரம்' என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் சம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம்... தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நிராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத ஹ்ருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.





இதைக் கண்ட இறைவன், ""கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.

வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், ""பால் கொடுத்தது யார்? என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.

அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.

இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.

புராண வரலாறு

ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும் போற்றப்படுகிறது.

மஹாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மஹாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மஹாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேஸ்வரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

தலப் பெயர்கள்

காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் "கழுமல வள நகர்' என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் "பிரம்ம புரம்' என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் "வேணுபுரம்' என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூஜித்ததால், "புகலி' என்றும், வியாழன் பூஜித்ததால் "வெங்குரு' என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் "தோணிபுரம்' என்றும், ராகு பூஜித்ததால் "சிரபுரம்' என்றும், வராக மூர்த்தி பூஜித்ததால் "பூந்தராய்' என்றும், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால் "புறவம்' என்றும், கண்ணன் பூஜித்ததால் "சண்பை' என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் "ஸ்ரீகாளிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

கல்வெட்டுகள்
இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.

ஆலய அமைப்பு

சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.

மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.

இறைவன்

இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.

இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.

விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர்விளங்குகிறார்.

உண்மையில் "காக்கும் கடவுளான' மாலவனுக்கு ஆணவ மலம் ஏது? நாமெல்லாம் கர்வமின்றி இருக்க வேண்டுமென்பதை உணர்த்துவதற்காகப் பரம்பொருளே இரண்டு வடிவமேற்று நிகழ்த்திய திருவிளையாடல் இது.

சட்டைநாதரை வணங்கினால் தீய குணங்கள் நம்மை சட்டை செய்யாது விலகும்! சங்கடங்கள் தீரும்! சிவசக்தியும் கிடைக்கும்!

தீர்த்தங்கள்
இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விழாக்கள்

இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.

நிர்வாகம்

இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.

சீகாழியால் உலகெங்கும் சிவ மணம் பரவியது! இன்றும் அது பரவிக் கொண்டிருக்கிறது! வருங்காலத்திலும் அது தொடரும் என்பது நிச்சயம்.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

கங்கை கொண்ட சோழபுரம் - வரலாறு


முதலாம் இராசேந்திர சோழன் அலைகடல் நடுவில், மரக்கலம் பலசெலுத்திப் பெற்ற கங்கை வெற்றியினைச் சிறப்பிக்கும் வகையில் கட்டப்பட்டது இக்கோயில். சிதம்பரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் தென்மேற்காகவும், கும்பகோணத்தில் இருந்து வடக்கே 30 கி.மீ தொலைவிலும், அரியலூரிலிருந்து மேற்கே 30 கி.மீ தொலைவிலும் அணைக்கரையில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது.


ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதலாம் இராசேந்திர சோழனின் தலைநகரம். கங்கை, இலங்கை, கடாரம், ஜாவா, போர்னியா, சுமத்திரா அந்தமான்- நிகோபார் எனப்பரந்து விரிந்த சோழப்பேரரசின் இதயம், இப்பகுதி. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு, குலோத்துங்கன், விக்கிரமசோழன், இராசாதிராசன் ஆகிய மன்னர்களின் தலைநகரம்.


தஞ்சைப் பெரியகோயிலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சைக் கோயிலைவிட சற்று உயரம் குறைந்தது. ஆயினும், கட்டடக் கலை நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய விமானத்திற்குப் பிறகு, கங்கை கொண்ட சோழீச்சுவரர் விமானமே தமிழ்நாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்து நிற்பதாகும்.

பெரும் கலைப்படைப்பை நமக்குத் தந்த மாமன்னன் குறித்த தகவல்களை இப்பதிவில் நன்றியோடு தெரிவிக்கிறேன். ஆலயம் குறித்த இதரத் தகவல்கள்.



முதலாம் இராசேந்திர சோழன்.
இயற்பெயர் மதுராந்தகன். சோழப்பேரரசன் இராசராச சோழனுக்கும், திரிபுவன மாதேவி என வழங்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 - 1044. ஆட்சி புரிந்த 32 ஆண்டுகளில் பெற்ற வெற்றிகள் எண்ணற்றவை. கி.பி. 1024 முதல் கி.பி. 1025 வரை கடல்கடந்து பர்மா, கடாரம் ஆகிய நாடுகளை வென்றான். " கடாரம்கொண்டான்" என்ற விருதுப் பெயரும் பெற்றான்.


இந்தியாவின் வடக்கே கங்கை நதிவரை இராசேந்திரன் வெற்றிக்கொடி பறந்தது. புலவர்கள் " கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் " என்று சிறப்பித்துப் பாடினர். மன்னனது வடநாட்டு வெற்றிக்கு வாளாகவும், கேடயமாகவும் விளங்கிய நம் வீரர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு நகரையே நிர்மாணித்து, மாபெரும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயிலைத் தோற்றுவித்து அழியாப் புகழ் கொண்டான். இராசேந்திர சோழன் மட்டுமல்லாது, அவனது மனைவியரும் இக்கோயிலுக்கு செப்புத் திருமேனிகளும், நிவந்தங்களும் அளித்துள்ளனர்.

கி.பி 1023 ல் வடநாட்டில் போர் தொடுத்து மண்ணைக்கடக்கம், கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம் முதலிய நாடுகளை வென்று, அந்நாட்டு அரசர்களின் தலைமீது கங்கை நீரைக் கொண்டு வரும்படிச் செய்தான். கங்கை நீர் தெளித்து நிர்மாணிக்கப்பட்ட கோயிலும், சுற்றுப்புறங்களும், மன்னனின் வெற்றியை இன்றும் பறைசாற்றுகின்றன.பாரிஜாத மலரில் ரீங்காரமிடும் தேனீயைப் போல சிவனுடைய தாமரைப் பாதத்தை நேசிப்பவனாக மதுராந்தகன் (இராசேந்திரன்) விளங்கினான் என்ற செய்தியை ஏசாலம் செப்பேடு கூறுகிறது. இது, செப்பேட்டின் வடமொழிப் பகுதியில் உள்ள செய்தியாகும்.

இதரப் பெயர்கள்: அதிசய சோழன், இரட்டபாடி கொண்ட சோழன், சோழேந்திர சிம்மன், பராக்கிரம சோழன், தான விநோதன், நிருபதிவாகரன், மனுகுலச்சோழன், மகிபாலக் குலகாலன், பண்டிதசோழன்.

இம்மன்னன் காலத்து குருமார்களாக சர்வசிவ பண்டிதர், ஈசானசிவ பண்டிதர், இலகுளீச பண்டிதர், நம்பியாண்டார் நம்பி, கருவூலத் தேவர், சதுரானன பண்டிதர் ஆகியோர் விளங்கினர். தனது குருவான சதுரானன பண்டிதர் விருப்பத்தின் பேரில் திருவொற்றியூர் கோயில் விமானத்தை, வீரசோழதச்சன் என்ற சிற்பியைக் கொண்டு அமைத்ததைக் கல்வெட்டு கூறுகிறது.

இமயத்தில், புலிச்சின்னம் பொறித்திட்ட மாமன்னன் கரிகாலச் சோழன் பரம்பரையில் வந்த இராசேந்திரன், எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மன்னன் விரும்பியது கங்கை வெற்றியைத்தான். எனவே, " பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன்" என சிறப்பிக்கப் பெற்றான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில், கல் காவியமாக, சிற்பக் களஞ்சியமாக, செப்புக்கலையின் கூடமாக, ஆன்மீக அமைதியின் இருப்பிடமாக, மாமன்னன் இராசேந்திரனின் போர்த்திறனையும், பேராற்றலையும் உலகோர்க்கு அறிவிக்கும் நிலைக்களனாகச் சோழ மண்ணில் திகழ்கிறது.

ஆலய படங்கள்:






ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

மருத்துவர் இராமதாசு: (பழைய ஐயா)

மருத்துவர் இராமதாசு,

இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர், இதைப்பற்றி இந்த கட்டுரையில் அலசுவோம்.

  1. யார் இந்த இராமதாசு?

  2. இவரின் பின்புலம் என்ன?

  3. எப்படி இவர் தமிழக அரசியலிலே ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார்?

  4. எப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு?

  5. இவரையும் பின்பற்ற, இவர் சொல்வதையும் கேட்க எப்படி பல லட்சம் பேர் உள்ளனர்?

இந்த கேள்விகளுக்கான விடைகளும், அதன் பின்னுள்ள அடித்தட்டு மக்களின் எழுச்சியும் தான் இன்றைக்கு பத்திரிக்கைகளாலும் மற்ற பலராலும் மருத்துவர் இராமதாசு மட்டையடிக்கப் படுவதற்கான காரணம். இதற்கெல்லாம் பதிலுரைக்க சில விடயங்களை சற்று விரிவாக பார்க்கவேண்டும்.
இராமதாசுவின் பின் புலம் வன்னிய சமுதாய மக்கள் தான்.இது எல்லோரும் அறிந்ததுதான். அது எப்படி ஒரு சமுதாயமே கண்மூடித்தனமாக இவரை பின் பற்றுகிறது. (இதுதான் பலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம், இதுவேதானமருத்துவர் இராமதாசு மீது சொல்லடியாக விழுகிறது).
முக்கியமான ஒரு தகவல், பலராலும் இதுவரை தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட விடயம், வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ, நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்ல, ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.

பல தசம ஆண்டுகளுக்கு முன் வரை எந்தவித விழிப்புமின்றி பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்த சமயங்களிலே தென் தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிட கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.
பெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து தேர்தலிலே போட்டியிட்டனர், தென்னாற்காடு மாவட்டத்திலே 18ல் 17 தொகுதிகளிளை வென்றனர் யாருடைய கூட்டணியுமில்லாமல்.
அவரது கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை. அப்போது சமுதாயப்பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அற்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம். மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்கு தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென அதிட்(ஷ்)டத்தினால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரை தாக்குகின்றனர்.இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம்,1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு,வன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத போராட்டத்தை வன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை .
நமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால் அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல் படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம் நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு. சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால் இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல் என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள் யாருடைய மரங்கள்? அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன?).
முதல் இரண்டு நாட்களிலேயே போராட்டத்தின் போக்கு புரிந்துவிட்டது. பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை, வன்னிய இனத்தோர் மீதும், வன்னிய கிராமங்களின் மீது மாபெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது, அது இதுவரை யாராலும், ஏன் வன்னிய இனத்தோரால் கூட இந்த உலகிற்கு சொல்லப்படவில்லை துப்பாக்கி சூட்டில் பல வன்னியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு தியாகியாயினர் அப்போதும் கூட போராட்டம் கட்டுக்கு வரவில்லை.போராட்டத்தை கட்டுக்கு கொண்டுவர ஒரே வழி கலவரம் தான், அதுவரை தலித் மக்கள் போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்,அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் இருந்தன.
அப்போதுதான் காவல்துறையால் தலித் மக்கள் தூண்டப்பட்டு நேரடிமோதல்கள் நடந்தன. எப்படி வன்னியர்களின் மறியல் போராட்டத்தை தலித் மக்களை தூண்டுவதன் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர் என்பதைப்பற்றி விரிவாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி அவருடைய பணிக்கால சாதனைகள் பற்றி குமுதத்தில் தொடராக எழுதியதில் விவரித்துள்ளார். இதனால் வட மாவட்டங்களில் ஒரு பத்து ஆண்டுகள் சாதித்தீ எரிந்து இப்போது ஒரு எட்டு ஆண்டுகளாகத்தான் அமைதியாக உள்ளது.
ஆனால் எதுவுமே மறியல் போராட்டத்தை தோல்வியுறச்செய்யவில்லை. பின் அரசாங்கம் மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை பட்டியல் என ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடும் அளித்தது.ஒரு சிறு இடைச்செருகல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்று பலர் விமர்சிக்கின்றனர் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவேண்டுமென இப்போராட்டம் நடத்தப்பட்டது என பலர் இன்று விமர்சிக்கின்றனர், ஆனால் 1987ல் நடந்த இப்போராட்டம் இராமதாசு அவர்களின் சுய நலத்துக்காக நடைபெற்றது என யாரும் விமர்சிக்கவில்லை, ஏன் அவரை கடுமையாக எதிர்க்கும் சில வன்னிய இனத்தலைவர்கள் கூட இந்த போராட்டத்தை விமர்சித்ததில்லை, ஏனெனில் இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்டது,

அதன் பிறகு மருத்துவர் இராமதாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்தடுத்து காண்போம்.....